

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனான ராமச்சந்திரன், அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்களான மோகன்ராஜ், கந்தசாமி ஆகியோர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மோகன்ராஜ், கந்தசாமி ஆகியோர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி போதைப் பொருட்களை விற்பது, திருடுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர்களுடன் பழகுவதை கடந்த சில மாதங்களாக ராமச்சந்திரன் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
தங்களுடன் பழகுமாறு வலியுறுத்தியும் அதனை ஏற்க ராமச்சந்திரன் மறுத்ததால், அவர் மீது இருவரும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் சேலையில் தூளி கட்டி அதில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் ராமச்சந்திரனை நேற்று அதிகாலை மோகன்ராஜூம், கந்தசாமியும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
தகவலறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் போலீஸார் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜ், கந்தசாமியை தேடி வருகின்றனர்.