

வேலூர்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசும்போது தனது மறைவுக்கு பிறகு தன்னுடைய சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறார் என்று எழுதி வைத்தால் போதும் என்று பேசினார்.
இதை விமர்சித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த 20-வது வார்டு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் அருண்குமார் (29) என்பவர் அவதூறு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இந்த புகைப்படம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காட்பாடியைச் சேர்ந்த திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், காட்பாடி காவல் ஆய்வாளர் தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து அதிமுக நிர்வாகி அருண்குமாரை பொள்ளாச்சியில் நேற்று கைது செய்தார். வேலூர் அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.