

நாகப்பட்டினம்: நாகை அருகே ரூ.30 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை நேற்று போலீஸார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீஸார், வேளாங்கண்ணியை அடுத்த சின்னதும்பூர் பாலம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்தவழியாக வந்த ஒரு வேனை சோதனை செய்ததில், ரூ.30 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் 10 பெட்டிகளில் நாகையில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, வேனில் வந்த பாப்பாகோவிலைச் சேர்ந்த சிங்காரவேல்(32), அவரது தம்பி கேசவன்(28) ஆகியோரை கைது செய்து வனத் துறையிடம் ஒப்படைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.