

பொன்னேரி: மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி பட்டப்பகலில் கத்திமுனையில் 3 இடங்களில் 15 பவுன் நகைகளை பறித்துச் சென்ற 2 மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ளஅயநல்லூர் பகுதியைச் சேர்ந்தமுனுசாமி. அவரது மகன் பிரபாகரன். இருவரும் அப்பகுதியில் உள்ள தங்களது வெண்டைக்காய் தோட்டத்தில் நேற்று காலை பணி செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் வெண்டைக்காய் வாங்குவது போல் வந்து, கத்தியை காட்டி மிரட்டி முனுசாமி அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் ஒரு மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினர்.
இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பொன்னேரி அருகே பேட்டை கிராமத்தில் மளிகை கடை நடத்திவரும் மதராசம்மாள் (60) என்றமூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த இரு நபர்கள், மளிகை பொருள் வாங்குவது போல் நடித்து, 5.5 பவுன் நகையை பறித்து சென்றனர்.
இதேபோல் பேட்டை கிராமம் அருகே உள்ள வெள்ளக்குளம் பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் சரோஜாம்மாள் (70), தன் மகன் ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் அணிந்த இரு நபர்கள், சரோஜாம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
இந்த 3 சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்து கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட இரு நபர்கள் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.