சென்னை | கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த பெண் வழக்கறிஞர் கைது

ரெஜிலா ஸ்ரீ
ரெஜிலா ஸ்ரீ
Updated on
1 min read

சென்னை: சென்னையில் கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் பல்வேறு அறக்கட்டளையின் சொத்துகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளும் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உள்ளன. இந்த சொத்திலிருந்து வரும் வருமானம் தர்ம காரியங்கள் மற்றும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான புரசைவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளநிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டதாகவும், அதை மீட்டு மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னைகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

போலி பட்டா: அதன்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் அனந்தராமன் தலைமையில் ஆய்வாளர் மேரி ராணி விசாரணை நடத்தினார். இதில், ஓட்டேரியைச் சேர்ந்த மாரியம்மாள் (84) என்பவர் போலி பட்டா ஒன்றை தயார் செய்து நிலத்தை அபகரித்ததோடு, அதை தனது மகள் நாகலட்சுமி, பேத்தியான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கொளத்தூரைசேர்ந்த ரெஜிலா  (40) ஆகியோர் பெயருக்கு மாற்றி எழுதி வைத்துள்ளார். மோசடிக்கு ரெஜிலா யும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெண் வழக்கறிஞரான ரெஜிலா யை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி ஆகும். இந்த வழக்கில் தொடர்புடைய நாகலட்சுமி காலமாகிவிட்டார். மாரியம்மாளின் முதுமையைக் கருத்தில் கொண்டு அவரை நாங்கள் கைது செய்யவில்லை. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in