

மதுரை: விசாரணைக்கு ஒத்துழைப்புத் தராததால் பிஹார் யூடியூப்பரை மீண்டும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலி வீடியோ வெளியிட்டதாக பிஹாரை சேர்ந்த யூடியூப்பர் மணீஷ் காஷ்யப்பை கடந்த வாரம் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். ஏப். 3-ம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நீதிமன்றத்தில் ஆஜர்: காவல் முடிந்த நிலையில் மணீஷ்காஷ்யப்பை நீதித்துறை நடுவர் டீலாபானு முன் போலீஸார் நேற்று காலை ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைபர் கிரைம் போலீஸார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மணீஷ்காஷ்யப் விசா ரணைக்கு முழு ஒத்துழைப்புத் தரவில்லை. ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்தார்.
7 நாட்கள் காவல்: அதில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவரை பிஹார் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால் மேலும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏப். 5-ம் தேதி விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து மணீஷ்காஷ்யப்பை போலீஸார் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.