

கோவை: கோவையில் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அரசு பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய ஹரியானாவை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எழுத்து தேர்வு கடந்த மாதம் 4-ம் தேதி கோவையில் நடந்தது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு கடந்த மாதம் 14-ம் தேதி நடந்தது. தேர்வு எழுதிய 4 பேரின் போட்டோ, கைரேகை ஆகியவை மாறுபட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் குனிக்கண்ணன் சாயிபாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் விரைவில் ஹரியானா செல்ல உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.