

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த முறுக்கு வியாபாரியை வெட்டிக் கொலை செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் முறுக்கு வியாபாரி அப்துல் லத்தீப்(45). இவரது மனைவி நிஷா. சாகுல் ஹமீது, தவுபிக் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
ரமலான் மாதத்தையொட்டி அப்துல் லத்தீப் மற்றும் குடும்பத்தினர் நேற்று அதிகாலை நோன்பு கடைப்பிடிக்கத் தொடங்கினர். மூத்த மகன் சாகுல் ஹமீது தொழுகைக்குப் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு அப்துல் லத்தீப்பைத் தாக்கி கழுத்தை அறுத்தனர். இதில் அவர் மயங்கி விழுந்தார். தந்தையைக் கொலை செய்ய முயன்றதைக் கண்ட இளைய மகன் தவுபீக்(15) தடுத்துள்ளார்.
இதில் சிறுவனுக்கும் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த தந்தை, மகனை ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் அப்துல் லத்தீப் வழியிலேயே உயிரிழந்தார். சிறுவன் தவுபீக் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் எஸ்.பி. வீ.பாஸ்கரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த வீட்டைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். திண்டுக்கல் நகர் மேற்கு போலீஸார் வழக்குப்பதிந்து கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.