

திருக்கழுக்குன்றம்: திருக்கழுகுன்றம் அருகே கொத்திமங்கலம் பகுதியில் சொத்து தகராறில் வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியால் அண்ணனை சுட்டு கொன்ற நரிக்குறவ இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருக்கழுகுன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், சந்திரன் (28). இருவரும் அண்ணன், தம்பிகள். இவர்களுக்குள் அடிக்கடி வீட்டுமனை குறித்த சொத்து தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தம்பி சந்திரன், தான் வைத்திருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை எடுத்து அண்ணன் வெங்கடேசனை சுட்டுவிட்டு தப்பினார். இதில் அவர் உயிரிழந்தார்.
இதையடுதது தப்பிச் செல்ல முயன்ற சந்திரனை போலீஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எடுத்து தரும்படி கேட்டனர்.
ஆனால் சந்திரன் இதற்கு ஒத்துழைக்காததால் அங்கிருந்த வீடுகளிலும் அதை ஒட்டியுள்ள புதர் பகுதியிலும் தேடினர். இதில் ஒரு சில வீடுகளில் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கள்ள துப்பாக்கிகள் கிடைத்தன.
பின்னர் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியுடன் மேலும் இரு துப்பாக்கிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சந்திரனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.