Published : 01 Apr 2023 06:50 AM
Last Updated : 01 Apr 2023 06:50 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம்போளூரை அடுத்த எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக (டேங்க்ஆபரேட்டர்) கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர், கடந்த டிசம்பரில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு, அவரது பணியை மனைவி பராசக்தி தொடர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக, தனது சகோதரர் ராஜனுடன் சென்று, ஊதியம் வழங்குமாறு ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவாவை சந்தித்து பராசக்தி கடந்த மார்ச் 21-ம் தேதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கணவர் கோவிந்தசாமி செய்து வந்த பணியை தனக்கு அல்லது தனது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ரூ.4.50 லட்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்த ஜீவா, ரூ.25 ஆயிரம் முன் பணம் வழங்கினால், வேறு நபருக்கு பணியைஒதுக்கீடு செய்யாமல் நிறுத்திவைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பராசக்தி புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீவாவிடம் ரூ.25 ஆயிரத்தை பராசக்தி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான ஆய்வாளர்கள் லஞ்சம் பெற்ற ஜீவாவை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT