

உதகை: பள்ளி சிறுமியை கடத்தி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து, நீலகிரி மாவட்ட நீதிபதி பி.முருகன் உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் கீழ் நாடுகாணியை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு, அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வந்து சென்றபோது நாடுகாணி பகுதியில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 17 வயது பள்ளி சிறுமியுடன் ராஜ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2017 செப்டம்பர் 21-ம் தேதி, அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு ராஜ்குமார் வீட்டை விட்டு சென்றுள்ளார். அருகில் இருந்த தனியார் எஸ்டேட்டுக்கு சென்று இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதில் அந்த சிறுமி உயிரிழந்தார். மயக்க நிலையில் கிடந்த ராஜ்குமாரை, அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் ராஜ்குமார் குணமடைந்தார்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தேவாலா காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு, உதகையிலுள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு கடத்தல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக 7 ஆண்டுகள் சிறைகள் மற்றும் ரூ 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி முருகன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.அபராத தொகையை, உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் வழங்க உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் எஸ்சிஎஸ்டி சிறப்பு வழக்கறிஞர் முகமது ஆஜராகினார். இதைத் தொடர்ந்து ராஜ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.