

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வருவதைத் தடுக்க ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார், நடைமேடை எண் 5-ல் வந்து நின்ற ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைச் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான பயணி ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், அவரது உடைமைகளை போலீஸார் சோதனை செய்தனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
ஆந்திராவில் இருந்து கடத்தல்: இதுகுறித்து அந்த நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் காதர்(49) என்பதும், ஆந்திராவிலிருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.