

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் செல்வநாதன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சம்பத் (48) என்பவர் மருத்துவம் படிக்காமல் அதேபகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கிளினிக் நடத்தி ஆங்கில முறைப்படி வைத்தியம் பார்த்து வருவது தெரியவந்தது.
இதைதொடர்ந்து, ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்து, அவரது கிளினிக்குக்கு ‘சீல்’ வைத்தனர்.
அதேபோல, ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில முறைப்படி சிகிச்சை அளித்து வந்த ஆரோக்கியராஜ் அதிகாரிகளின் சோதனையை அறிந்து தலைமறைவானார்.
இதனைத்தொடர்ந்து, ஆரோக்கியராஜ் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி ‘சீல்’ வைத்தமருத்துவக்குழுவினர் இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆரோக்கிய ராஜை தேடி வருகின்றனர்.