Published : 31 Mar 2023 04:02 PM
Last Updated : 31 Mar 2023 04:02 PM

தி.மலை அருகே ரூ.25,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவி கைது

கைது செய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி ஜீவா: கோப்புப் படம்

திருவண்ணாமலை: போளூரில் உயிரிழந்த கணவர் செய்து வந்த டேங்க் ஆபரேட்டர் பணியை மனைவிக்கு வழங்க முன் பணமாக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற எடப்பிறை ஊராட்சி மன்றத் தலைவி ஜீவாவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (மார்ச் 31) கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக (டேங்க் ஆபரேட்டர்) கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு, அவரது பணியை அவரது மனைவி பராசக்தி தொடர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை.

இது தொடர்பாக, தனது சகோதரர் ராஜனுடன் சென்று, ஊதியம் வழங்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவை சந்தித்து பராசக்தி கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி வலியுறுத்தி உள்ளார். மேலும், கணவர் கோவிந்த சாமி செய்து வந்த பணியை தனக்கு அல்லது தனது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவி ஜீவா நெருக்கடி கொடுத்துள்ளார்.

வறுமையில் உள்ள தனது குடும்பத்தினருக்கு பணியை வழங்க வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது. ரூ.4.50 லட்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்த, ஊராட்சி மன்ற தலைவி ஜீவா, ரூ.25 ஆயிரம் முன் பணம் வழங்கினால், வேறு நபருக்கு பணியை ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பராசக்தி புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களது அறிவுரையின் பேரில், போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (31-ம் தேதி) நடைபெற்ற திட்ட விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவிடம் ரூ.25 ஆயிரத்தை பராசக்தி கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவி ஜீவாவை கைது செய்தனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான இடத்தை வழங்கியதால், கோவிந்த சாமிக்கு டேங்க் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x