

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டை செட்டி தெருவைச் சேர்ந்தவர் குமார் (48). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் குமாரிடம் 10 ரூபாய் யாசகம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு, குமார் அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற குமார், அருகில் இருந்த பிரியாணி கடையில் ரூ.2 ஆயிரம் கொடுத்து, சில்லறை கேட்டுள்ளார்.
யாசகம் கேட்ட நபர் இதை கவனித்துவிட்டு, "உன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு, ரூ.2 ஆயிரம் மாற்ற முயற்சிக்கிறாயே?" என்று கூறி, குமாரிடம் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் குமாரின் கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி போலீஸார் குமாரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், குமாரைத் தாக்கியது சிந்தாதிரிப்பேட்டை சரவணன் (32) என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சரவணனை போலீஸார் கைது செய்தனர்.