

மதுரை: மதுரையில் கஞ்சா வழக்கில் 4 பெண்கள் உட்பட 9 பேருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை கூடுதல் போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று கஞ்சா தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
முதலாவதாக, மதுரை ஆரப்பாளையத்தில் பிடிபட்டவர்கள் தொடர்பானது. இதில், மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் 2020-ல் 11 கஞ்சாவுடன் ஆரப்பாளையம் கண்மாய்கரையைச் சேர்ந்த பாண்டியம்மாள் (45), அவரது தாயார் நாகம்மாள் (75) உள்பட 5 பேரை கரிமேடு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மதுரை கூடுதல் போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் விசாரித்து நாகம்மாள், பாண்டியம்மாள் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை மற்றும் தா ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுரேந்திரன் வாதிட்டார்.
இரண்டாவதாக, உசிலம்பட்டியில் பிடிபட்டவர்கள் தொடர்பானது. இதில் உசிலம்பட்டி கட்டதேவன்பட்டியைச் சேர்ந்த ராமன், பாண்டி, பாண்டியம்மாள், பிரியா ஆகியோரை 30 கிலோ கஞ்சாவுடன் போலீஸார் 2015-ல் கைது செய்தனர். இந்த வழக்கை நீதிபதி ஏ.எஸ்.ஹரிகரகுமார் விசாரித்து, ராமன் உட்பட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மூன்றாவதாக, மதுரை வீரமுடையான் கோயில் எதிரில் பிடிபட்டவர்கள் தொடர்பானது, இதில் மதுரை முத்துப்பட்டி கண்மாய்கரை ரோடு, வீரமுடையான் கோயில் எதிரில் காரில் 40 கிலோ கஞ்சா கடத்திய கீரிப்பட்டி சின்னச்சாமி (49), மானூத்து ராஜ்ஜியபிரபு என்ற கருவாயன் (36), வீரேந்திரன் (32) ஆகியோரை சுப்பிரமணியபுரம் போலீஸார் 2021-ல் கைது செய்தனர்.
இந்த வழக்கை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி ஹரிஹரகுமார் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் கே.விஜயபாண்டியன் வாதிட்டார். விசாரணை முடிந்த நிலையில் சின்னசாமி உட்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி இனறு தீர்ப்பளித்தார். இந்த மூன்று வழக்குகளில் இவ்வாறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன.