

சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் திருடப்படுவதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியானது.
அதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் செல்போன் எண் மற்றும் சுய விவரங்கள் திருடப்பட்டு தனியார் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல்ரூ.10 ஆயிரம் வரை பேரம் பேசி கும்பல் ஒன்று விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்களையும் பள்ளிக்கல்வித் துறை கல்வி மேலாண்மை தகவல் இணைய பக்கத்தில் (எமிஸ்) சேமித்து ரகசியமாக பராமரித்து வருகிறது. இந்நிலையில் மாணவ-மாணவிகளின் தரவுகள் திருடப்பட்டதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் தகவல் திருட்டு விவகாரம் குறித்து சென்னை மாவட்ட கல்வி அதிகாரி (எஸ்எஸ்ஏ)புண்ணியகோடி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன் பேரில், மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.இந்நிலையில், பள்ளி மாணவர்களின் விவரம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக 2 பிரிவுகளில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் (எமிஸ்)சேமித்து ரகசியமாக பராமரிக்கப்பட்டுவரும் மாணவர்களின் விவரங்களை கல்வித்துறை ஊழியர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு வழங்கினார்களா? அல்லது ஹேக்கர்கள் ஹேக் செய்து தகவல்களை திருடினார்களா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 26 லட்சம்மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இவர்களில் எத்தனை பேரின் தகவல்கள் திருடப்பட்டு தனியார்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.