

சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துபாலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.
ஆசையை தூண்டி.. இதை நம்பி பலர், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதனிடையே, இந்த திட்டத்தின் மூலம் மக்களிடம் ஆசையை துண்டி, பண மோசடியில் அந்தநிறுவனம் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர். விசாரணையில் அந்த நிறுவனம், சுமார் ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த மைக்கேல்ராஜை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மைக்கேல் ராஜ் ஆருத்ரா நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.
வீட்டில் சோதனை: விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த மைக்கேல்ராஜ், கடந்த 10 மாதங்களாக துபாயில் பதுங்கியிருந்து சென்னைக்கு திரும்பியபோது போலீஸாரிடம் சிக்கியுள்ளார். விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் போலீஸார் நேற்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் அங்கிருந்த சொத்து ஆவணங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.