

சென்னை: நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுவந்த பிரபலகொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 56செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவர் கடந்த 19-ம் தேதி அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் அருகே நடந்துசென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், அர்ஜுனிடம் எழுதுவதற்குப் பேனா கேட்பதுபோல நடித்து, அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
அதிர்ச்சி அடைந்த அர்ஜுன் இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாபு என்றபல்சர் பாபு (32) என்பது தெரியவந்தது.
அவரைக் கைது செய்த போலீஸார், அவர் அளித்த தகவலின் பேரில் திருட்டு செல்போன்களை வாங்கி விற்பனை செய்துவந்த எழும்பூரைச் சேர்ந்த ஆனந்த் (25) என்பவரைக் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
பாபுவை விசாரணை செய்ததில், அவர் சென்னையின் பல்வேறுபகுதிகளில், சாலையில் நடந்து செல்வோரிடம் எழுத பேனா கேட்பதுபோல் நடித்து கடந்த 7 மாதங்களில் 200-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை பறித்துள்ளார். அவற்றை ஆனந்திடம் விற்பனை செய்துள்ளார்.
பாபு மீது ஏற்கெனவே 4 பிடியாணைகள் நிலுவையிலுள்ளதும், 4 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.