ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு வழக்கில் கைதான பணிப்பெண்ணிடம் இருந்து மேலும் 43 பவுன் நகைகள் மீட்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு வழக்கில் கைதான பணிப்பெண்ணிடம் இருந்து மேலும் 43 பவுன் நகைகள் மீட்பு
Updated on
1 min read

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடுபோன வழக்கில் கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணிடமிருந்து மேலும் 43 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனது வீட்டு லாக்கரில் இருந்த தங்கம், வைரம் மற்றும் வெள்ளி என 60 பவுன் நகை திருடப்பட்டு விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்தமாதம் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணை நடத்தினர். ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த சென்னை மந்தைவெளி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஈஸ்வரி (46), கார் ஓட்டுநர் திருவேற்காடு மனசுரா கார்டனைச் சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரிடமும் போலீஸார் விசாரித்தனர்.

இதில், இருவரும் நகையை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கடந்த 21-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈஸ்வரியிடமிருந்து 100 பவுன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் திருடிய நகைகளை விற்று அதன் மூலம் வாங்கப்பட்ட வீட்டுக்கான பத்திரம் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன.

60 பவுன் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 100 பவுனுக்கு அதிகமான நகைகள் மீட்கப்பட்டது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இதைவிடவும் அதிகமான நகைகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது தந்தைரஜினி, கணவர் தனுஷ் வீடுகளிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்ட பணிப்பெண் ஈஸ்வரியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர்.

அதன்படி, ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரையும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நேற்றுமுன்தினம் போலீஸாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து இருவரையும் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பணிப்பெண் ஈஸ்வரி மறைத்து வைத்திருந்த மேலும் 43 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் மேலும்100 பவுன் திருட்டு நகைகள் இருக்கவாய்ப்பு உள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த நகைகளை மீட்கும் முயற்சியிலும் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஐஸ்வர்யா வீட்டில் மட்டும் கைவரிசை காட்டினார்களா அல்லது ரஜினி, தனுஷ் மற்றும் அவர்களது உறவினர் வீடுகளிலும் கைவரிசை காட்டினார்களா? எப்படி நகை திருட்டில் ஈடுபட்டார்கள், எவ்வளவு நகைகளை இதுவரை திருடி உள்ளனர், திருடிய நகைகளை என்ன செய்தார்கள், இவர்களது பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in