Published : 29 Mar 2023 07:18 AM
Last Updated : 29 Mar 2023 07:18 AM

சென்னை | 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பகை கொலையில் முடிந்தது: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது

வியாசர்பாடியில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னை: அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் வியாசை இளங்கோவன் (48). ரியல்எஸ்டேட் தொழில் செய்து வந்தஇவர், அதிமுகவில் வட சென்னைவடக்கு (கிழக்கு) மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை வழிமறித்து கொலை செய்துவிட்டு தப்பியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செம்பியம் போலீஸார், இளங்கோவன் உடலைகைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், இளங்கோவன் கொலையான செய்திகேட்டு அதிமுகவைச் சேர்ந்த 200-க்கும்மேற்பட்டோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை முன்பு திரண்டு கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திபோலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தலைமறைவான கொலையாளிகளை கைது செய்ய துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டன. இதையடுத்து கொலை தொடர்பாக வியாசர்பாடி கக்கன்ஜி அன்பழகன் தெருவைச் சேர்ந்த சஞ்சய் (19), அவரது கூட்டாளிகள் அதே பகுதி நெடுஞ்செழியன் தெரு அருண் (28), அதே பகுதி சர்மா நகர் வெங்கடேசன் (30), கொடுங்கையூர் கணேசன் (23) மற்றும் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கொலைக்கான காரணம்: கொலைக்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட சஞ்சய் கூறியதாவது, ``2 ஆண்டுகளுக்குமுன்பு அப்பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது, நானும் எனதுநண்பர்களும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தோம்.

அப்போது இளங்கோ எங்களை கண்டித்ததோடு தாக்கவும் செய்தார். அவரிடம் அடிவாங்கிய போது நான் சிறுவனாக இருந்தேன். அதனால் என்னால் எதிர்த்துநிற்க முடியவில்லை. ஆனால், அவமானமாக உணர்ந்தேன். இதன்பின்னர் எங்கள் பகுதியைசேர்ந்த பலர் என்னை பார்த்துஇளங்கோவிடம் அடி வாங்கியவன் என்று அடிக்கடி கூறி ஏளனம் செய்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். இதற்காகதிட்டம் போட்டு காத்து இருந்தோம். இந்நிலையில்தான் அவர்தனியாக வந்தபோது கொலை திட்டத்தை நிறைவேற்றினோம்'' என சஞ்சய் வாக்குமூலமாக கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: பெரம்பூர் தெற்கு பகுதிஅதிமுக செயலாளர் வியாசைஇளங்கோவன் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். வியாசை இளங்கோவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x