Published : 29 Mar 2023 07:08 AM
Last Updated : 29 Mar 2023 07:08 AM
சென்னை: கட்டிட திட்ட அனுமதிக்கு ரூ.12 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சிஎம்டிஏ அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஸன் (சிடிஎஸ்) நிறுவனம் 2.7 மில்லியன் சதுர அடியில் புதிய கட்டிடத்தை கட்ட கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இந்த கட்டிடத்தை அந்த நிறுவனம் “எல் அண்ட் டி” நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கட்டி வந்தது.
ஆனால் இந்த கட்டிடம் கட்டுவதற்கு சிஎம்டிஏ அனுமதியை பெறவில்லை. கட்டிடம் கட்டத் தொடங்கி 14 மாதங்களுக்கு பின்னர் சிஎம்டிஏ அனுமதியை பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விண்ணப்பம் சிஎம்டிஏ அலுவலகத்தில் 8 மாதங்களும், அரசிடம் 7 மாதங்களும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் இருந்தது. ஆனால் அதற்குள் கட்டிடம் 40 சதவீதம் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டிட அனுமதியை பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டதால், கட்டுமான தொய்வு ஏற்பட்டது.
கட்டிட அனுமதி பெற லஞ்சம்: இதையடுத்து, கட்டிட அனுமதி பெறுவதற்கு இரு நிறுவனங்களும், சிஎம்டிஏவுக்கு லஞ்சம் வழங்க முடிவு செய்தனர். இது தொடர்பாக காக்னிஸன்ட் நிறுவன நிர்வாகிகள், அமெரிக்காவில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் மின்னஞ்சல் மூலம்தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு அந்த நிறுவன நிர்வாகிகள் சம்மதித்துள்ளனர்.
சிஎம்டிஏவுக்கு லஞ்சமாக கொடுக்கும் பணத்தை கட்டிடத்தின் பிற செலவினத்தை காட்டி பெற்றுக் கொள்வது என எல் அண்டிடி நிறுவனமும், காக்னிஸன்ட் நிறுவனமும் முடிவு செய்து கொண்டன.
இதைத் தொடர்ந்து சிஎம்டிஏ அதிகாரிகளுடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அந்த கட்டிட அனுமதிக்கு சிஎம்டிஏவுக்கு ரூ.12 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கட்டிட அனுமதி கிடைத்துள்ளது. சென்னையில் காக்னிஸன்ட் நிறுவனம், லஞ்சம் கொடுத்து கட்டிடம்கட்ட அனுமதி பெறப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
9 பேர் மீது வழக்கு: இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பெயர் குறிப்பிடாமல் சிஎம்டிஏ அதிகாரிகள், காக்னிஸன்ட் நிறுவனத்தின் இந்தியமுன்னாள் தலைவர் ஸ்ரீமணிகண்டன், நிர்வாகி தர் திருவேங்கடம், காக்னிஸன்ட் நிறுவனம், எல் அண்ட் டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் ரமேஷ், கண்ணன், சதீஷ், சுப்பிரமணியன், எல் அண்ட் டி நிறுவனம் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், முறைகேட்டில் தொடர்புடைய சிஎம்டிஏ அதிகாரிகள், அரசியல்வாதிகள் பெயர்கள் சேர்க்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT