Published : 29 Mar 2023 06:00 AM
Last Updated : 29 Mar 2023 06:00 AM
ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த படகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (65). இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஆலங்காயம் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் உதயகுமாரின் உடலை மீட்டு, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
உதயகுமாரின் உடல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் அறிக்கையை வைத்து ஆலங்காயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட உதயகுமாரின் மூத்த சகோதரர் சிவக்குமார் என்பவருக்கும், உதயகுமாருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் சிவகுமாருக்கும், உதயகுமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது, அங்கு வந்த சிவக்குமாரின் மகன் மணிகண்டன் (33) ஆத்திரமடைந்து, உதயகுமாரை சரமாரியாக தாக்கியதில், பலத்த காயமடைந்த உதயகுமார் உயிரிழந்தார்.
உதயகுமார் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், உதயகுமாரை டிராக்டரில் அமர வைத்து, டிராக்டரை கீழே தள்ளிவிட்டு, விபத்து ஏற்பட்டு சித்தப்பா உதயகுமார் உயிரிழந்தாக கூறி பொதுமக்களை நம்ப வைத்தது மட்டும் அல்லாமல் காவல் துறையினரிடம் நாடகமாடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, சந்தேகமரணம் என பதியப்பட்ட இந்த வழக்கை ஆலங்காயம் காவல் துறையினர் நேற்று கொலை வழக்காக பதிவு செய்து மணிகண்டனை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT