

சென்னை: கஞ்சா கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
பெரியமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சூளை சைடன்ஹாம் சாலையில் கஞ்சா விற்பனை நடந்துவருவதாக கடந்த 2019 ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினத்தன்று) போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து புளியந்தோப்பிலிருந்து சென்ட்ரல் வரும் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவை மறித்து சோதனை நடத்தியதில் அதில் 3 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.2 லட்சத்து 52,260 ரொக்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்த பெரியமேடு போலீசார் ஆட்டோவில் இருந்த முத்துலட்சுமி (32), காந்திமதி (29), ஆனந்தவல்லி (32) ஆட்டோ ஓட்டுநர் கோகுல்தாஸ் (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சரண் (28), முனியம்மாள் (48) ஆகிய இருவர் அங்கு நடக்கும் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களையும் பிடித்த போலீஸார் அவர்களையும் கைது செய்தனர். விசாரணையின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய மணிவண்ணன், வேலழகி (57), கணேஷ் (32) ஆகியோர் மீதும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனைவரும் புளியந்தோப்பு பகுதிய சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜரானார். விசாரணை காலத்தில் மணிவண்ணன் இறந்துவிட்டதால் மற்ற 8 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் முத்துலட்சுமிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.