

சேலம்: சேலத்தில் நீதித் துறை நடுவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜேஎம் எண்:4-ல் குற்றவியல் நீதித் துறை நடுவராக பணியாற்றி வருபவர் பொன்பாண்டியன். கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள நீதிபதி அறையில் பொன்பாண்டியன் பணியில் இருந்தார். அப்போது, அங்கே வந்த நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவர், பணி மாறுதல் குறித்து நீதித் துறை நடுவர் பொன் பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது, நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் நீதித் துறை நடுவர் பொன் பாண்டியனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் பலத்த காயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீதித் துறை நடுவரை கத்தியால் குத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட நீதிமன்ற ஊழியர் பிரகாஷுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.