

கோவை: கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் பாஜகவைச் சேர்ந்த சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய, பாஜக உறுப்பினரான பேக்கரி மேற்பார்வையாளரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அன்னூர் சாலை, குமரபுரத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(32). இவர், அப்பகுதியில் உள்ள பேக்கரியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
விஸ்வநாதன் 4 மாதங்களுக்கு முன்னர் ஆன்லைன் வழியாக பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். ஆனால், தற்போது வரை அவருக்குஎந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. பொறுப்பு வழங்க உள்ளூர் கட்சி நிர்வாகிகள் சிலர் தடையாக இருப்பதாக அவர் நினைத்தார்.
இந்நிலையில், கடந்த 25-ம் தேதி இரவு மேட்டுப்பாளையம் பேங்க் சாலை அருகே சென்றபோது, பெட்ரோல் ஊற்றி நிரப்பப்பட்டு திரியைப் பற்ற வைத்த நிலையில் பெட்ரோல் குண்டை காரில் வந்த சிலர் தன் மீது வீசிச் சென்றதாகவும், இதில் தனது சட்டை எரிந்து சேதமடைந்ததாகவும் மேட்டுப்பாளையம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில், யாரும் அவ்வழியாக வந்ததற்கோ, அவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கோ முகாந்திரம் இல்லை என்பதையறிந்த போலீஸாருக்கு, விஸ்வநாதனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, விஸ்வநாதன் முன்னுக்கு பின்னர் முரணான தகவல்களை தெரிவித்தார்.
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கட்சியில் பொறுப்பு வாங்குவதற்காகவும், அதற்கு இடையூறாக உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் இருவரை பழிவாங்குவதற்காகவும், அவர்கள் தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக விஸ்வநாதன் நாடகமாடியது தெரியவந்தது.
பேங்க்மேடு அருகேயுள்ள அரவிந்த் நகர் செல்லும் வழியில்இருட்டான பகுதியில் வைத்து விஸ்வநாதன் தன் மீது பெட்ரோல்ஊற்றிக் கொண்டார். பின்னர்,சட்டையை கழற்றி தீ வைத்துக்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்’’ என்றனர்.