

விழுப்புரம்: சென்னை பெருங்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ்(33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஜெய்கணேஷ் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியது.
இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்.1-ல், சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியைச் சேர்ந்த முருகன்(26), நுங்கம்பாக்கம் தெற்கு மாடவீதியைச் சேர்ந்த பிரவீன் (23), மண்ணூர்பேட்டை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த தர்(27) ஆகியோர், நடுவர் ராதிகா முன்னிலையில் சரணடைய வந்தனர்.
அவர்களின் சரண் மனுவை ஏற்கக் கூடாது என்று, விழுப்புரம் வழக்கறிஞர்கள் நடுவரிடம் கோரிக்கை வைத்தனர். எனினும், சரணடைந்த 3 பேரையும் வரும் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, சரணடைந்த 3 பேரும் வேடம்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.