Published : 28 Mar 2023 06:14 AM
Last Updated : 28 Mar 2023 06:14 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே முன் விரோதத்தில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன்குளத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் காளீஸ்வரன்(24). இவரும், இவரது நண்பர்களும் முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அழகன்குளத்தைச் சேர்ந்தகணேசன் மகன் ரஞ்சித் குமார், நாகலிங்கம் மகன் குமார் என்ற கூலுக்குமார் ஆகியோரை தாக்கியுள்ளனர். பின்னர் கூலுக்குமாரின் வீட்டுக்குச் சென்று பொருட்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக தேவிபட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை காளீஸ்வரன் டிராக்டரில் திருட்டு மணல் ஏற்றி வந்துள்ளார். அப்போது போலீஸார் சோதனையிட வாகனத்தை நிறுத்தியபோது, டிராக்டரை விட்டுவிட்டு காளீஸ்வரன் தப்பிச்சென்றார். பின்னர் இரவு அழகன்குளத்தைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரது வீட்டின் வாசலில் காளீஸ்வரன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு அழகன்குளத்தைச் சேர்ந்த செல்வன் மகன் பல்லுபாலா, ரஞ்சித்குமார், கூலுக்குமார், வேலுச்சாமி மகன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அரிவாள்களுடன் வந்து காளீஸ்வரனை தாக்கியுள்ளனர். இதில் காளீஸ்வரன் உயிரிழந்தார்.
அவர்களை தடுக்க முயன்ற ஷாஜகானுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக பல்லுபாலா(33), ரஞ்சித்குமார்(29), கூலுக்குமார்(30), பாலகிருஷ்ணன்(30) ஆகியோர் மீது தேவிபட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பல்லுபாலா, ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT