

சிவகங்கை: சிவகங்கை அருகே இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் காவலரின் கணவர் உட்பட மூவரை வாளால் வெட்டி நகை, பணம் உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்த 2 பேரை, போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சிவகங்கையில் மதுரை சாலையில் கடந்த 25-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மதுரை வரிச்சியூரைச் சேர்ந்த செக்கடியான், மானாமதுரை அருகே மழவராயனேந்தலைச் சேர்ந்த பெண் காவலரின் கணவர் மோகனசுந்தரேஸ்வரன் மற்றும் திருப்பத்தூர் சாலையில் ஒக்கூர் அருகே சந்தோஷ்குமார் ஆகிய மூவரையும் வாளால் தாக்கிவிட்டு, இவர்களிடமிருந்து நகை, பணம், மொபைல் போன் ஆகியவற்றை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்தது.
கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்ததால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், சார்பு-ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், நாகராஜன், சிறப்பு எஸ்.ஐ. விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், சிவகங்கை அருகே பில்லூரைச் சேர்ந்த ஜெயராமன் என்ற சந்தோஷ் (23), பாலமுருகன், அழுபிள்ளைதாங்கியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20) ஆகிய மூவர் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஜெயராமன், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 3 மொபைல் போன்கள், ஒன்னேகால் பவுன் சங்கிலி, ஒரு வாள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவான பால முருகனை தேடி வருகின்றனர்.
தற்போது, இரவு நேரங்களில் மதுரை, தொண்டி, மேலூர், இளையான்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் சாலைகளில் போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.