

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே நிதி நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.6.17 லட்சம் கொள்ளையடித்ததாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட் டம் செய்யாறு அடுத்த புளியரம் பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் மணிமாறன்(31). வந்தவாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், வசூல் பணம் ரூ.16.55 லட்சத்தை எடுத்து கொண்டு கடந்த 24-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் செய்யாறு சென்றுள்ளார்.
வந்தவாசி-செய்யாறு சாலை யில் புலிவாய் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, இரண்டு கார்களில் வந்த 7 பேர், மணி மாறனை வழிமடக்கி காரில் கடத்தி சென்றுள்ளனர்.
ஆரணி அருணகிரி சத்திரம் அருகே சென்றபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பார்த்ததும், மணிமாறன் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து காரை விரட்டி சென்று காவல் துறையினர் மடக்கினர். அப்போது, காரில் இருந்த 5 பேரில் 4 பேர், ரூ.6.17 லட்சத்துடன் தப்பியோடிவிட்டனர். ஆரணி அடுத்த புங்கன்பாடி கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம்(55) மட்டும் சிக்கினார்.
அவரது பிடியில் இருந்து மணிமாறன் மற்றும் ரூ.10.38 லட்சத்தை மீட்டனர். இதையறிந்து மற்றொரு காரில் வந்த 2 பேர், காருடன் தப்பிவிட்டனர். இதைத்தொடர்ந்து காருடன்பிடிபட்ட ஆறுமுகம், கடத்தல்கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டமணிமாறன் மற்றும் கைப்பற்றப் பட்ட ரூ.10.38 லட்சம் ஆகிய வற்றை வந்தவாசி வடக்கு காவல்துறையிடம் ஆரணி காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், காரில் 2 பேர் தப்பித்து சென்றுள்ளது குறித்து மாவட்டம் முழுவதும் தெரிவிக்கப்பட்டு, வாகன சோதனைதீவிரப்படுத்தப்பட்டன.
இதன் எதிரொலியாக, வந்தவாசி அடுத்த மும்முனி கிராம வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வந்தவாசி வடக்கு காவல்துறையிடம் காரில் தப்பித்த செய்யாறு அடுத்த ஜடேரி கிராமத்தில் வசிக்கும் தங்கவேலு(21), பெரும்பாளையம் கிராமத்தில் வசிக்கும் அஜித்குமார் ஆகியோர் நேற்று முன் தினம் சிக்கினர்.
இது குறித்து மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், தங்கவேலு மற்றும் அஜித்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ.6.17 லட்சத்துடன் தப்பியோடிய ஆரணியைச் சேர்ந்த ராம்கி உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, “மணிமாறன், தங்கவேலு, அஜித்குமார் ஆகியோர் அதே நிதி நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். வசூல் பணத்தை செய்யாறுக்கு இரு சக்கர வாகனத்தில் மணிமாறன் எடுத்துச் செல்வதை தெரிந்துக்கொண்டு கொள்ளையடிக்க திட்டமிட்டு, ராம்கி கூட்டாளிகள் உதவியுடன் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.