Published : 26 Mar 2023 04:13 AM
Last Updated : 26 Mar 2023 04:13 AM

பழங்குடி இருளர்கள் 7 பேர் சித்திரவதை - புதுச்சேரியில் உண்மை அறியும் குழு இன்று விசாரணை

புதுச்சேரி: இரு பழங்குடியின சிறுவர்கள் உட்பட அந்த இனத்தைச் சேர்ந்த 7 பேரை சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை, பொய் வழக்குப் போட்ட சம்பவம் குறித்து உண்மை அறியும் குழு இன்று விசாரணை நடத்துகிறது.

இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் போலீஸார் பழங்குடி இருளர் சிறுவர்கள் இருவர் உட்பட அந்த இனத்தைச் சேர்ந்த 7 பேரை சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதைச் செய்து, கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குப் போட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, இதுபோல் விழுப்புரம் மாவட்டம் மயிலம், கண்டமங்கலம் காவல் நிலையங்களிலும், புதுச்சேரி மங்கலம், வில்லியனூர் காவல் நிலையங்களிலும் போலீஸார் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகள் போட்டு இருளர் பழங்குடியினரை கைது செய்து வருகின்றனர். இந்த வழக்குகள் அனைத்தும் அப்பட்டமான பொய் வழக்குகள் ஆகும்.

கடந்த 7-ம் தேதி அன்று புதுச்சேரியில் நடந்த அனைத்துக் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் கூட்டத்தில் காவல்துறை அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அமைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் மோகன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மக்கள் சிவில் உரிமைக் கழகப் பொறுப்பாளர் பேராசிரியர் கோச்சடை, அரசு கல்லூரி மேளான் முதல்வர் பேராசிரியர் சிவக்குமார், மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் ரமேஷ், பழங்குடி மக்கள் விடுதலை இயக்கச் செயலாளர் ஏகாம்பரம் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு இன்று பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மக்களை நேரில் சந்தித்து விசாரிக்கிறது. மேலும், சிறையில் இருக்கும் பழங்குடி இருளர் 5 பேர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோரையும் சந்தித்து விசாரிக்க உள்ளது. பின்னர், விரிவான உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படும். அதனைப் புதுச்சேரி, தமிழக அரசுகளுக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் உரிய சட்ட நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x