Published : 24 Mar 2023 07:16 AM
Last Updated : 24 Mar 2023 07:16 AM
நாகர்கோவில்: குமரியில் பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியாரை தப்ப வைக்க முயற்சி நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்ட நிலையில், இவ்வழக்கில் உரிய முறையில் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ள குமரி மாவட்ட எஸ்.பி., வழக்கை திசை திருப்பும் வகையில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(29) என்பவர் அழகியமண்டபம் அருகே பினாங்காலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். இவர் 75-க்கும் மேற்பட்டபெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ, போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பானது.
இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் பெண்கள் புகார் அளித்ததன் அடிப்படையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே பாதிரியாரின் ஆபாச படங்களை பரப்பியதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பாதிரியாரின் செல்போனுடன் அவரது நண்பர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு கேரளாவில் தேடும் பணி நடந்து வருகிறது.
சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கைப்பற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை சைபர் கிரைம் போலீஸார் மேற்கொண்டுள்ளனர். பாதிரியாரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய அனைவரையும் கைது செய்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே பாதிரியாரை இவ்வழக்கில் இருந்து தப்ப வைப்பதற்கான முயற்சியை போலீஸார் கையாள்வதாகவும், பாதிரியார் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு உதவி செய்த முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை இல்லை எனவும், சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதுதொடர்பாக குமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் கூறும்போது, “பாதிரியார் சம்பவத்தில் விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நேரத்தில் வழக்கை திசைதிருப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT