

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில் வசிப்பவர் பொன்னுசாமி மகன் ஆனந்தகுமார்(24). இவர், திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு கடந்த 26-02-21-ல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஆனந்தகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.