

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மனைவி மீது, ஆசிட் ஊற்றிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார்(42). ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர், மனைவி மீது திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு கோவையில் பேருந்தில் பெண் பயணியிடம் நகை திருடியதாக கவிதா மீது ஆர்.எஸ்.புரம் போலீஸில் வழக்கு உள்ளது. இதில் அப்போது கைது செய்யப்பட்ட கவிதா பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கவிதா, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். இச்சூழலில் கவிதா, தனக்கு அறிமுகமான வேறொரு நபருடன் வசித்து வருவதாக சிவக்குமாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், 23-ம் தேதி வழக்கு விசாரணைக்காக ஜே.எம்.1 நீதிமன்றத்துக்கு கவிதா வர உள்ள தகவலும் சிவக்குமாருக்கு தெரியவந்தது.
அதன்படி, திருட்டு வழக்கு விசாரணைக்காக கவிதா இன்று (23-ம் தேதி) ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்தார். அங்கு வந்த சிவக்குமார், கவிதாவை சந்தித்து தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். கவிதா மறுப்பு தெரிவித்துவிட்டு, முதல் தளத்தில் உள்ள ஜே.எம்.1 நீதிமன்றத்துக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சிவக்குமாரும் சென்றுள்ளார். பின்னர், நீதிமன்றத்துகுள் சென்று விட்டு, கவிதா வெளியே வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த சிவக்குமார், தான் கொண்டு வந்திருந்த கழிவறை கழுவும் ஆசிட் திரவத்தை எடுத்து கவிதாவின் மீது ஊற்றினார்.
கவிதாவின் முகத்தின் ஒரு பகுதி, உடலின் முன்பகுதியில் ஆசிட் விழுந்தது. இதில் அவரது சேலை எரிந்து, உடலில் தீக்காயம் ஏற்பட்டது. அருகேயிருந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தான் அணிந்திருந்த கருப்பு கோர்ட்டை கழற்றி பெண்ணின் மீது போட்டார். அந்த உடையும் எரிந்து சேதமடைந்தது. கவிதாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த, வழக்கறிஞர்கள் தப்பிக்க முயன்ற சிவக்குமாரை பெண் காவலர் இந்துமதியின் உதவியுடன் பிடித்து அடித்து அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கவிதாவை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சம்பவம் நடந்த பகுதியில் துணை ஆணையர் (வடக்கு) சந்தீஷ், உதவி ஆணையர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். மனைவி கவிதா, தன்னையும், குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு வேறொருவருடன் வசித்து வந்ததால் ஆசிட் வீசியதாக சிவக்குமார் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐபிசி 326 (ஏ) பிரிவின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீஸார் சிவக்குமார் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.