

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக, அவதூறு வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 20-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த அறிவிப்பை கேலி, கிண்டல் செய்யும் வகையில், ட்விட்டர் பக்கத்தில், நடிகர்கள் செந்தில், கவுண்டமணி நடித்த காட்சியைப் பதிவிட்டும், அதில், முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை ஒப்பீடு செய்தும், அவதூறு பரப்பும் வகையிலும் ஒரு வீடியோ பரவியது.
சமூக வலைதளங்களில் இது வைரலானது. இதையடுத்து, இந்த வீடியோ பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக அரசின் மீது அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர்நாகஜோதி, கூடுதல் துணை ஆணையர் ஷாஜிதா தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பெண்களின் மாண்பைக் குலைக்கும் வகையிலும், இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் வீடியோ பதிவிட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ட்விட்டர் கணக்கு அட்மின் கும்மிடிப்பூண்டி பிரதீப் (23) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.