சென்னை | தொழில் போட்டியில் நண்பர் கொலை: 2 பேர் கைது
சென்னை: தொழில் போட்டி காரணமாக நண்பரை கொலை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெரு மேற்கு மாட வீதியில் ஒரு ஆட்டோவில் ஒரு நபர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடப்பதாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு நேற்று முன்தினம் கிடைத்த தகவலின் பேரில், அங்குசென்ற போலீஸார் இறந்த நபரின்உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், இறந்தவர் திருவொற்றியூர் ஏகவள்ளி அம்மன் கோயில்தெருவை சேர்ந்த மோகன் (38) என்பதும், கொலை சம்பவத்தில்ஈடுபட்டது தண்டையார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (23), சிவா (24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ``கொலை செய்யப்பட்ட மோகனும், மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சுப நிகழ்ச்சிகளில் அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தனர். பின்னர் இருவரும் பிரிந்து,தனித்தனியாக அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். இதனால், இருவருக்கும் இடையில் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 19-ம் தேதி இரவு மணிகண்டனுக்கும், மோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்து கோபத்தில் சென்ற மணிகண்டன், சிறிது நேரம் கழித்து அவரது மற்றொரு நண்பரான சிவாவுடன் வந்து அங்கு ஆட்டோவில் தூங்கி கொண்டிருந்த மோகனை இருவரும் சேர்ந்துகொலை செய்தனர்'' என தெரியவந்ததாக போலீஸார் கூறினார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர். மணிகண்டன், சிவா மீது காவல் நிலையங்களில் பல்வேறுகுற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
