

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணியிடம் நகை, செல்போன் பறித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மணியரசன்(50). அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் காஞ்சிபுரம் செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
தஞ்சாவூர் பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து சென்னை பேருந்து நிறுத்தப்படும் இடத்துக்கு நடந்து சென்றபோது, அங்கு ஆட்டோவில் வந்த 2 பேரில் ஒருவர், மணியரசனின் செல்போனையும், மற்றொருவர் மணியரசன் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இதுகுறித்து மணியரசன் அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் குற்றப் பிரிவு போலீஸார், பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மணியரசனிடம் செல்போன், நகையைப் பறித்ததாக புதுக்கோட்டை திருக்கோகர்ணம் புதுத் தெருவைச் சேர்ந்த கோழி பாலு என்ற பாலகுரு(27), திருச்சி மலைக்கோட்டை ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சுரேஷ்(27) ஆகியோரைக் கைது செய்தனர்.