Published : 21 Mar 2023 06:43 AM
Last Updated : 21 Mar 2023 06:43 AM

தலைமறைவாக இருந்த குமரி பாதிரியார் கைது எப்படி? - பின்னணி தகவல்கள்

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ

நாகர்கோவில்: பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ பரவிய நிலையில் தலைமறைவாக இருந்த பாதிரியாரை, போலீஸ் தனிப்படையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). கிறிஸ்தவ பாதிரியாரான இவர் அழகியமண்டபம் அருகே பிலாங்காலையில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். இவர் தேவாலயத்துக்கு வரும் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இவரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவிஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார்அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வந்தனர்.

பாதிரியாரின் லேப்டாப்பை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தபோது அதில், 75-க்கும்மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்தன. இவற்றில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவற்றை கைப்பற்றும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். மேலும் பாதிரியாரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நீதிமன்றத்தில் நேற்று சரணடையத் திட்டமிட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை முதல் அவரது செல்போன் சிக்னலை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் உள்ள வீட்டில் அவர் இருப்பது தெரியவந்தது.

தனிப்படை போலீஸார் அங்குசென்று பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். பிறகு எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த விவரமும் அவரிடமிருந்து பெறப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் பாதிரியார் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x