

சென்னை: 3 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் ரூ.161 கோடிவரை வசூலித்து பண மோசடியில் ஈடுபட்டதாக அம்ரோ கிங்ஸ் நிதி நிறுவனத் தலைவர், இயக்குநரான அவரது மனைவி மற்றொரு இயக்குநர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் அம்ரோ கிங்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் முதலீட்டாளர்களுக்கு மாதம் 10 சதவீதம் லாபம் தருவதாகவும், முதலீடு செய்த தேதியிலிருந்து 22 மாதம் முடிவில் முதலீட்டுத் தொகை முழுவதையும் திரும்ப வழங்கிவிடுவதாகவும் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.
இதை உண்மையென நம்பி முதலில் 71 முதலீட்டாளர்கள் ரூ.3 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால், அம்ரோ கிங்ஸ் நிறுவனத்தினர் உறுதியளித்தபடி முதலீடு மற்றும் லாபத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த அசோக் நகரைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவர் அம்ரோ கிங்ஸ் நிறுவனம் குறித்து அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், சாந்தகுமார் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.161 கோடி வரை பணத்தை இழந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான சென்னை அசோக் நகரை சேர்ந்த ராஜராஜன், இயக்குநரான அவரது மனைவி முத்துலட்சுமி மற்றொரு இயக்குநர் மறைமலை நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் ஆகிய 3 பேர் மீதும் மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 16-ம் தேதி வழக்குப் பதியப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 பேரின் வீடு, அலுவலகம் உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், ராஜராஜன், முத்துலட்சுமி, ரஞ்சித் குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்த உரிய அசல் ஆவணங்களுடன் காவல் ஆய்வாளர் மற்றும் அம்ரோ கிங்ஸ் நிறுவன வழக்கின் புலன் விசாரணை அதிகாரியை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், அசோக் நகர், சென்னை என்ற முகவரியில் நேரில் சந்தித்து புகார் கொடுக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.