

கரூர்: கரூரில் ஜவுளி ஏற்றுமதியாளர் வீட்டில் 103 பவுன் நகைகள் திருடியவர் நேற்று கைது செய்யப்பட்டார். கரூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(60). ஜவுளி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
இவர், மார்ச் 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு மார்ச் 13-ம் தேதி திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 103 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கரூர் நகர போலீஸார் 5 ரோடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(34) என்பதும், இவர் திருப்பூரில் வசித்து வருவதும், அவரது பையில் தங்க நகைகள் இருந்ததும் தெரியவந்தது.
மேலும், ராமகிருஷ்ணபுரம் ஜவுளி ஏற்றுமதியாளர் வீட்டில் 103 பவுன் நகைகள், சோழன் நகர் பகுதியில் 2 பவுன் நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து, 105 பவுன் நகைகளை மீட்டனர்.
பாலாஜி மீது 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் வாழ்த்து தெரிவித்தார்.