Published : 19 Mar 2023 04:00 AM
Last Updated : 19 Mar 2023 04:00 AM
சென்னை: சென்னையில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த 5 புதிய திட்டங்கள் விரைவில் அமல்படுத்த உள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எழும்பூரில் செய்தியாளர்களுடன் நேற்று கலந்துரையாடினார். பின்னர், கூடுதல் ஆணையர் லோக நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் முதல்முறையாக சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் ‘ட்ரோன் காவல் அலகு’ என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஏஎன்பிஆர் கேமராக்களுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட 9 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவை தரையில் இருந்து 5 முதல் 10 கி.மீ. தொலைவுக்குப் பறக்ககூடியவை. இதன் மூலம் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, கூட்டத்தில் நடமாடும் பழைய குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காண முடியும்.
இதேபோல, சைபர் குற்றவாளிகளைக் கண்டறித்து, தக்கநடவடிக்கை எடுக்கும் வகையில்இணையவழி சைபர் குற்ற எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட உள்ளது. பருந்து செயலியை உருவாக்கி, பழைய குற்றவாளிகள், ரவுடிகளின் பதிவை டிஜிட்டல் மயமாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருட்டு வாகனத்தை அடையாளம் காணும் வகையில்,ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (ஐவிஎம்ஆர்) செயலி உருவாக்கப் பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கும் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. மேலும், கடற்கரையில் ரோந்து செல்ல ‘பீச் பகி’ எனப்படும், அனைத்து நிலப் பரப்பிலும் செல்லும் 4 வாகனங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் ஆணையர் லோகநாதன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT