Published : 19 Mar 2023 04:17 AM
Last Updated : 19 Mar 2023 04:17 AM

திருச்சியில் இரவு நேரங்களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு - நகை, பொருட்களுக்காக கொடூரமாக தாக்கப்படும் பொதுமக்கள்

திருச்சி: திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவற்றில் பல நிகழ்வுகளில் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் இரக்கமின்றி பொதுமக்களை கொடூரமாகத் தாக்கும் செயல்களும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், மார்ச் 12-ம் தேதி மாலை திருச்சி கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சீதாலட்சுமி(53) என்பவரின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கிய ஒரு நபர், அவரை தரதரவென இழுத்துச் சென்று, செல்போன், இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றார்.

மார்ச் 14-ம் தேதி உறையூர் குழுமணி சாலையில் நடந்து சென்ற கவிதா என்ற பெண் பொறியாளரை 3 பேர் தாக்கி, 12 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். மார்ச் 15-ம் தேதி நள்ளிரவில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னகரிலுள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த அரியமங்கலம் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன் (44) என்பவரை இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர், செங்கல்லால் தாக்கி, செல்போனை பறித்துச் சென்றனர்.

பிப்.20-ம் தேதி இரவு திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காட்டூரைச் சேர்ந்த உதயன்(37) என்பவரை 3 பேர் இரும்புக் கம்பியால் தாக்கி கீழே விழச் செய்து, அருகிலுள்ள புதருக்கு இழுத்துச் சென்று, உடலில் கத்தியால் வெட்டி, 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம், லேப்டாப் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

அதேநாளில், அதே சாலையில் பெரம்பலூரைச் சேர்ந்த மணிகண்டன்(37) என்பவரையும் தாக்கி, செல்போன், பணத்தை பறித்துச் சென்றனர். ஜன.30-ம் தேதி இரவு சங்கிலியாண்டபுரம் பகுதியில் நடந்து சென்ற அரியலூரைச் சேர்ந்த சார்லி(73) என்பவரை தாக்கி செல்போனையும், பொன்மலை குடிநீர் தொட்டி அருகே நடந்து சென்ற மகேஸ்வரி(42) என்பவரை தாக்கி நகைகளையும் பறித்துச் சென்றனர்.

இதுபோன்று, திருச்சி மாநகரில் கடந்த ஜனவரியிலிருந்து தற்போது வரை 30 இடங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் நகை, பணம், பொருட்களை இழந்தது மட்டுமின்றி, கொள்ளையர்கள் தாக்கியதால் கொடுங்காயத்துக்கு ஆளான பலர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, பல நாட்கள் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுபோன்ற கொடூர குற்றச் செயல்களால், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும்கூட இரவு நேரங்களில் தனியாக பொதுவெளியில் நடமாட அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், திருச்சி மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x