

புதுச்சேரி: புதுச்சேரி அண்ணாசாலையில் கிடந்த ரூ.49 லட்சத்தை பெரியக்கடை போலீஸார் கைப்பற்றினர். பின்னர், ஆட்சியர் உத்தரவுப்படி நீதிமன்றத்தில் இந்தத் தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி அண்ணாசாலை - செட்டிவீதி சந்திப்பில் கேட்பாரற்று, பை ஒன்று சாலையோரம் கிடந்துள்ளது. அங்குள்ள டீ கடையின் மாஸ்டர் பெரியசாமி (54) என்பவர் அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் உடன் அழைத்து வந்து, அந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதில், 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் அதிகளவில் இருந்தன. இதையடுத்து பெரியக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். பணப்பையுடன் டீ மாஸ்டரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அந்த பையில் உள்ள தொகையை காவல் நிலையத்தில் வைத்து எண்ணிப் பார்த்தபோது, அதில் ரூ.49 லட்சம் இருந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், அந்தப் பணத்தை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க சென்றனர். ஆட்சியரின் அறிவுறுத்தல்படி தெற்கு பிரிவு சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரூ.49 லட்சம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆட்சியர் மணிகண்டனிடம் கேட்டதற்கு, "சாலையோரம் கிடைத்த ரொக்கப் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்தொகைக்கான ஆவணங்களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று கூறினார்.
மேலும் இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பணம் கிடைத்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வழியாக, இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒருவர், தனது பக்கவாட்டில் மாட்டியிருந்த பை கீழே விழுந்த காட்சி பதிவாகியிருந்தது. பின்னர் அந்த பையை, டீ மாஸ்டர் பெரியசாமியும், ஆட்டோ ஓட்டுநரும் திறந்து பார்த்ததும் பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி ஆதாரங்களை போலீஸார் சேகரித்துள்ளனர்.
இதற்கிடையே, வெங்கட்டா நகரைச் சேர்ந்த சங்கர் போர்வால் தனது பணம் வங்கியில் செலுத்த சென்றபோது தவறி விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். உரிய ஆவணங்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சமர்ப்பிக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.