திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி ரூ.85 கோடி மோசடி | 2 பேர் கைது, 6 பேருக்கு வலைவீச்சு

கைதான செந்தில் குமார் மற்றும் வீரமணி
கைதான செந்தில் குமார் மற்றும் வீரமணி
Updated on
1 min read

விழுப்புரம்: திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி ரூ.85 கோடி மோசடி செய்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திண்டிவனத்தில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்நிறுவனத்தை திண்டிவனம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (45) என்பவர் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதம் கழித்து ரூ.90 ஆயிரமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும், ரூ.5 லட்சம் செலுத்தினால் ரூ.9 லட்சமும், ரூ.10 லட்சம் செலுத்தினால் ரூ.18 லட்சமும், ரூ.20 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.36 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டது

இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மண்ணுலிங்கம் (51) உள்ளிட்ட அவருக்கு தெரிந்த 9 பேர் சேர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் ரூ.55 லட்சத்தை செலுத்தியுள்ளனர். முதிர்வுக்காலம் முடிந்தபின்பும் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்திற்கு சென்று பார்த்தபோது நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர். அதன்பேரில் அந்நிறுவன நிர்வாக இயக்குனர்கள் மாயகிருஷ்ணன், மஞ்சுளா, மாயகிருஷ்ணன் மனைவி பிரபாவதி மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கவுதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார் ஆகிய 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அவர்கள் 8 பேரும் சேர்ந்து, இதுபோன்று 7 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.85 கோடி வரை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாயகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேரையும் போலீஸார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (மார்ச் 17) இரவு வீரமணி (46), செந்தில்குமார் (45) ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மேலும் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in