

சென்னை: தங்கும் விடுதியில் மேற்கு வங்க தொழிலாளி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்தவர் மங்கர் (25). இவர், சூளைமேடு பாட்ஷா தெருவில் உள்ள ஒரு விடுதியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி முதல் மங்கரை காணவில்லை. இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் விடுதி நிர்வாகிகள் புகார் அளித்ததையடுத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தங்கும் விடுதியில் தாழ்ப்பாள் இடப்பட்டிருந்த அறை ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து, அறையை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மங்கர் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக கிடந்தார்.
சடலத்தை கைப்பற்றிய போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.