

சென்னை: சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மைதீன் ராவுத்தர் (37). இவர் கடந்த ஜனவரி 20-ம் தேதி இரவு தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த சென்றபோது, அங்கு 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் மைதீன் ராவுத்தரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, பழைய வண்ணாரப்பேட்டை ஜான்ஜெய்சிங் (43), தண்டையார்பேட்டை ரமேஷ் (29) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருவான்மி யூர், பெரியார் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சங்கர் (36) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘கைது செய்யப்பட்டுள்ள சங்கர் திருவான்மியூர் காவல் நிலையசரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது ஏற்கெனவே 16 குற்ற வழக்குகள் உள்ளது. தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகிறோம்’ என்றனர்.