Published : 18 Mar 2023 06:08 AM
Last Updated : 18 Mar 2023 06:08 AM
திருச்சி: உதவி பேராசிரியருக்கு சம்பள நிலுவைத் தொகையை பெற்றுத்தர ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம் பூண்டியிலுள்ள அ.வீரைய்யா வாண்டையார் நினைவு புஷ்பம் கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல்.
இவரது பதவி உயர்வுக்குரிய 19 மாதங்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை பெற்று வழங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலக உதவியாளர் டி.வேணுகோபால் என்பவரை கடந்த 18.1.2012-ம் தேதி திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக ஓராண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், அரசுப் பதவியை தவறாகப் பயன்படுத்தி கையூட்டு பெற்றதற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும், செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேலை, டிஎஸ்பி மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT