நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே சொத்து முழுவதையும் தனக்கு எழுதி கொடுக்கும்படி கொடுமை செய்யும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாய், தனது மகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி அருகே திருத்து பகுதியை சேர்ந்தவர் இசக்கி அம்மாள். இவருக்கு முத்தையா என்ற மகனும், வெயிலாட்சி என்ற மகளும் உள்ளனர் வெயிலாட்சிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் இல்லாததால் வெயிலாட்சி தனது தாய் இசக்கியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இசக்கியம்மாள் தனக்கு சொந்தமான சொத்துகளை தனது மகன் மற்றும் மகளுக்கு சமமாக பிரித்து கொடுப்பதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால், முத்தையா சொத்துகளை யாருக்கும் பிரித்து கொடுக்கக் கூடாது என்றும், அனைத்து சொத்துகளும் தனக்குத் தான் வேண்டும் எனவும் கேட்டு தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தாயை அவர் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் வேதனை அடைந்த இசக்கியம்மாள், அவரது மகள் வெயிலாட்சி மற்றும் அவரது 2 குழந்தைகள் ஆகியோர் திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது தாங்கள் பாட்டிலில் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை இசக்கியம்மாளும், வெயிலாட்சியும் தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இது குறித்து வெயிலாட்சி கூறும்போது, எனது அண்ணன் முத்தையா அடிக்கடி எனது தாயை அடித்து துன்புறுத்துகிறார். நிலத்தை அபகரிப்பதற்காக தினந்தோறும் என் தாயை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in