

புதுக்கோட்டை: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் இன்று (மார்ச் 17) தீர்ப்பு அளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொத்தகம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (44). இவர், கடந்த 2021-ல் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை யாரிடமும் கூறக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா இன்று தீர்ப்பளித்தார். அதில், கருப்பசாமி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம், சிறுமையை மிரட்டிய குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை ரூ.2.35 லட்சத்தை சிறுமிக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
வழக்கில் அரசு வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார். இந்த வழக்கில் முறையாக புலன் விசாரணை செய்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினரை எஸ்.பி வந்திதா பாண்டே பாராட்டினார்.