

நாகர்கோவில்: பெண்களுடன் இருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பாதிரியார் தலைமறைவாகியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்ட்றோ(29). அழகியமண்டபம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றுகிறார். இவர், பெண்கள் சிலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கிடையே பெங்களூருவில் நர்சிங் படிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்ட்றோ மீது புகார் கொடுத்துள்ளார். பாதிரியார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் தலைமறைவாகி விட்டார். அவர் பெங்களூருவில் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.